யார் கிருஷ்ணமூர்த்தி.. இவர் மட்டும் இல்லாமல் போயிருந்தால் நமது பொதுத்துறை நிறுவனங்களின் கதி…?

[ad_1]

யார் இந்த கிருஷ்ணமூர்த்தி?

தஞ்சாவூர் அருகே உள்ள கருவேலி என்னும் கிராமப் பின்னணியில் பிறந்தது வளர்ந்தவர். 1925-ம் ஆண்டு தைத் திருநாளில் பிறந்தவர். தாத்தாவுக்கு கிராமத்தில் பெரிய அளவிலான சொத்துகள் இருந்தன. இதனால் இவருடைய அப்பா மற்றும் அப்பாவுடன் பிறந்தவர்கள் பெரிய அளவில் கல்வி கற்கவில்லை. அதே சமயம், தொழிலிலும் பெரிய ஆர்வம் இல்லை. விவசாய நிலம் மட்டுமே போதும் என்னும் நிலையில் இருந்தார்கள்.

ஆனால் 1929-ஆம் ஆண்டு சர்வதேச அளவில் பொருளாதாரம் பெரும் பாதிப்புக்கு உள்ளான போது, நிலைமை மோசமானது. தவிர, அந்த சமயத்தில் காவிரியில் வெள்ளம் வந்ததால், விவசாயிகளுக்கு பெருத்த அடி. இதனால் குடும்பத்துக்குக் கடன் அதிகரித்தது. விவசாய நிலத்தை விற்க வேண்டிய சூழல் உருவானது. ஊரில் இருக்கும் இடத்தை விற்று ஊரை விட்டு வெளியேறினார்கள். அப்போது கிருஷ்ணமூர்த்தியின் தந்தை ஏதாவது தொழில் செய்யலாம் என்று நினைத்து சென்னை வந்தார். இதனால் படிப்பு மட்டுமே காப்பாற்றும் என குடும்பத்தினர் படிக்கத் தொடங்கினார்கள்.

62beb0cf427b9
வி.கிருஷ்ணமூர்த்தி

முக்கியமான கல்லூரிகளில் இடம் கிடைக்காததால் மூன்று ஆண்டு இன்ஜினீயரிங் படிப்பைப் படிக்கத் தொடங்கினார் கிருஷ்ணமூர்த்தி. கல்லூரி படிக்கும் போதே, சுதந்திரப் போராட்டத்திலும் கலந்துகொண்டு போராடினார்.

படித்துமுடித்த பின் ஆரம்பத்தில் ஒப்பந்தப் பணியாளராக சில மாதங்கள் வேலை பார்த்தபின், மெட்ராஸ் மாகாணத்தில் மின் வாரியத்தில் பணி கிடைத்தது. குந்தா அணை உள்ளிட்ட பல மின் உற்பத்தித் திட்டங்களில் டிசைன் பிரிவில் பணியாற்றினார்.

மின் உற்பத்தித் திட்டங்களில் பணியாற்றி அனுபவம் இருந்தாலும், அவருக்கு பதவி உயர்வு கிடைப்பது தாமதமாகிக் கொண்டே வந்தது. அந்த சமயத்தில் இரண்டாம் ஐந்தாண்டு திட்டத்துக்கான ஆராய்ச்சி அலுவலர்களை மத்திய அரசு தேர்வு செய்வதற்கான அறிவிப்பினை வெளியிட்டது. அதில் தேர்வாகி மத்திய அரசுப் பணிக்கு சென்றார் கிருஷ்ணமூர்த்தி. ஓர் ஆண்டுக்குப் பிறகு மீண்டும் சென்னைக்கு வந்தார், பழைய வேலையில் நீடிப்பதா அல்லது டெல்லியில் இருப்பதா என்னும் சூழல் வந்தபோது டெல்லியிலேயே இருந்து பணியைத் தொடரும் முடிவினை எடுத்தார்.

சொன்ன நேரத்தில் டெலிவரி…

திட்டக் குழுவில் இருந்ததால், பிரதமர், மாநில முதல்வர்கள், மத்திய அமைச்சர்கள் என பலரிடமும் நேரடியாக உரையாடும் வாய்ப்பு இவருக்குக் கிடைத்தது. திட்டக்குழுவில் இருந்து பி.ஹெச்.இ.எல் நிறுவனத்துக்கு மாறினார் கிருஷ்ணமூர்த்தி. அந்த நிறுவனத்தின் திருச்சி பிரிவில் பொது மேலாளராக பதவியேற்றார். அப்போது மெட்ராஸ் பெர்டிலைசர்ஸ் என்னும் நிறுவனம் ஒரு ஆலையை அமைக்கத் திட்டமிட்டது.

ஆனால், அரசு நிறுவனம் என்றாலே காலதாமதமாகவே செயல்படும் என்னும் எண்ணம் இருந்ததால், மெட்ராஸ் பெர்டிலைசர்ஸ் ஆர்டர் கொடுக்கவில்லை. அப்போது சரியான நேரத்தில் டெலிவரி செய்து தருவேன் என உத்தரவாதம் தந்து, அந்த ஆர்டரைப் பெற்றதுடன், சொன்ன நேரத்தில் அந்த டெலிவரியை முடித்தும் தந்தார்.

belதிருச்சியில் உள்ள பெல் நிறுவனம்

இவரது தலைமையில் திருச்சி பி.ஹெச்.இ.எல் யூனிட் சிறப்பாக செயல்பட்டாலும் ஒட்டுமொத்த நிறுவனம் சிறப்பாக இல்லை. அதனால் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி ஒட்டுமொத்த நிறுவனத்தையும் தனித்தனியாகப் பிரிக்கலாம் என திட்டமிட்டார். இந்தத் திட்டத்தை செயல்படுத்தும் பணி கிருஷ்ணமூர்த்தியிடம் வந்தது. அந்த யோசனையை ஏற்க மறுத்துவிட்டு, நிறுவனத்தைத் தனித்தனியாகப் பிரிக்காமலே அதை லாபப் பாதைக்குக் கொண்டு வர தீவிரமாகத் திட்டமிட்டார். அவர் திட்டமிட்டது போல, அடுத்த ஆண்டே அந்த நிறுவனத்தை லாபத்துக்குக் கொண்டு வந்தார் கிருஷ்ணமூர்த்தி. இந்தியாவில் சிறப்பான மேனேஜர்கள் இல்லை என்று இந்திரா காந்தி நினைத்துக் கொண்டிருந்ததை தவிடு பொடியாக்கினார் அவர்.

மாருதியை உருவாக்கி ஜெயிக்க வைத்தவர்…

பி.ஹெச்.இ.எல்., மாருதி மற்றும் செயில் ஆகிய மூன்று நிறுவனங்களை மீட்டெடுத்தவர் இவர். அந்தக் காலத்தில் பொதுத்துறை நிறுவனங்கள் என்றாலே நஷ்டத்தில் மட்டுமே இயங்கும் என்று இருந்த பிம்பத்தை சுக்குநூறாக உடைத்தவர். அந்த நிறுவனங்கள் நஷ்டத்தில் இருந்து காப்பாற்றி, லாபமீட்டும் நிறுவனமாக மாற்றியவர்.

செயில் மற்றும் பி.ஹெச்.இ.எல் நிறுவனங்கள் ஏற்கெனவே செயல்பட்டு வந்தன. ஆனால், மாருதி நிறுவனம் அப்போதுதான் தொடங்கப்பட்டது. அந்த நிறுவனத்துக்கு என ஒரு அடையாளத்தை உருவாக்கியவர் வி.கிருஷ்ணமூர்த்தி. வெளிநாட்டு டெக்னாலஜி இல்லாமல் மாருதியை உருவாக்க முடியாது என்பதுதான் அப்போதைய யதார்த்தமாக இருந்தது. எனவே, ஜப்பான் நாட்டின் சுசூகியுடன் இணைந்து செயல்படுவதற்கு அரசை சம்மதிக்க வைத்ததும் கிருஷ்ணமூர்த்திதான்.

maruti suzuki carsமாருதி தொழிற்சாலை

ஆனால், ஜப்பானியர்களின் நம்பிக்கையைப் பெறுவது அவ்வளவு எளிதல்ல. அவர்களுடைய தொழில் நுட்பத்தை யாரும் சிதைத்து விடக் கூடாது என்பதில் அவர்கள் மிகக் கவனமாக இருப்பார்கள். ஆனால், அப்படிப்பட்ட ஜப்பான் நிறுவனத்துடன் பேசி அவர்களின் நம்பிக்கையைப் பெற்றார். அதிலும், அவர்களின் முழு நம்பிக்கைக்கும் பாத்திரமானார் கிருஷ்ணமூர்த்தி. அவரால் மட்டுமே இந்தத் திட்டத்தை சிறப்பாக செய்ய முடியும் என்று ஜப்பான் சுசூகி நிறுவனம் நம்பியது. ஒருவேளை, கிருஷ்ணமூர்த்தி இந்தத் திட்டத்தில் இல்லாமல் போயிருந்து, அந்தத் திட்டம் இத்தனை பெரிய வெற்றியைக் கண்டிருக்குமா என்பது சந்தேகம்தான் என்று மாருதியின் தலைவர் ஆர்.சி. பார்கவா தெரிவித்திருக்கிறார்.

மாருதி டு செயில்…

அடுத்ததாக, ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தபோது செயில் நிறுவனத்தை மீட்டெடுக்கும் பொறுப்பும் இவருக்கு கொடுக்கப்பட்டது. அந்தப் பொறுப்பிலும் வெற்றி பெற்றார் வி.கிருஷ்ணமூர்த்தி.

Sail webpசெயில்

அதே போல, நிறுவனத்துக்கு பிரத்யேக கொள்கையை உருவாக்குவது அடுத்தகட்ட தலைமை எப்படி இருக்க வேண்டும், முடிவுகளைக் கூட்டாக எப்படி எடுப்பது என்பது உள்ளிட்ட பல விஷயங்கள் இந்திய கார்ப்பரேட்டுகளில் இவர் உருவாக்கியதுதான். செயில் நிறுவனத்தின் தலைமைப் பொறுப்புக்கு கிருஷ்ணமூர்த்தி சென்றபோது, மாருதியை ஏற்று நடத்துவதற்கு ஆர்.சி. பார்கவா தயாராக இருந்தார். செயில் நிறுவனத்தின் தலைவராக 1985 முதல் 1990-ம் ஆண்டு வரை இருந்தார்.

ஜப்பானின் மிக உயரிய விருது…

பொதுத் துறை நிறுவனங்களின் தந்தை, திருப்புமுனை மனிதர் உள்ளிட்ட பல அடையாங்கள் இவருக்கு உள்ளன. இது தவிர, ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம் உள்ளிட்ட பல கல்வி நிறுவனங்களில் தலைவராக இருந்திருக்கிறார். நேரு, இந்திரா, மொராஜி தேசாய், ராஜீவ் காந்தி, மன்மோகன் சிங் உள்ளிட்ட பிரதமர்களுடன் இணைந்து செயல்பட்டிருக்கிறார். அரசின் பல அமைப்புகளுக்கு ஆலோசகராக இருந்திருக்கிறார். திட்டக் குழுவில் ஆராய்ச்சிப் பிரிவில் பணியாற்றியவர், திட்டக்குழு உறுப்பினர் அளவுக்கு உயர்ந்தார்.

Rising sunஆர்டர் ஆப் த ரைசிங் சன்

பத்மஸ்ரீ, பத்மபூஷன், பத்மவிபூஷன் உள்ளிட்ட மூன்று விருதுகளையும் பெற்றிருக்கிறார். ஜப்பானின் உயரிய விருதான ‘ஆர்டர் ஆப் தி ரைசிங் சன்’ என்னும் விருதும் 2009-ம் ஆண்டு இவருக்கு வழங்கப்பட்டது.

சர்வதேச அளவில் உள்ள பல நிர்வாக மேதைகள் நமக்குத் தெரிந்திருக்கும். ஆனால் இவர் இறக்கும் வரை இப்படி ஒருவர் இருப்பதே பலருக்கும் தெரியாது என்பதுதாம் பெரும் சோகம்.

கிருஷ்ணமூர்த்திக்கு ஆழ்ந்த அஞ்சலிகள்… அவர் மாதிரி இன்னும் ஆயிரம் கிருஷ்ணமூர்த்திகள் நமக்குத் தேவை…!

நன்றி

Leave a Comment